vishnuchittan

Friday, November 25, 2005

சுதர்ஸன் ஸ்ரீனிவாஸ்


இன்று (25-11-2005) தி நகர் பத்மா சேஷாத்திரி பாரத் கலாசார் ஆடிடோரியத்தில் ந்டைபெற்ற திருமதி ஒய் ஜி பார்தசாரதியின் 80 வது பிறந்தநாளில் நடைபெற்ற எண்டோமெண்ட் உரையை ஒட்டி நடைபெற்ற் விழாவில் சுதர்ஸனுக்கு 2005-2006 க்கான ஸ்காலர்ஷிப் ரூ.1200/- ஐ திருமதி ஒய் ஜி பார்தசாரதி வழங்குகிறார்.

அருகில் சுவாமி தயானந்த ஸரஸ்வதியும் தமிழ்நாடு பிரின்சிபல் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திருமதி வத்ஸலா ரகுவும். சுவாமி தயானந்த ஸரஸ்வதி எண்டோமெண்ட் உரையாக மானவ சேவை மாதவ சேவை என்ற தலைப்பில் அருமையான உரை நிகழ்த்தினார். திருமதி வத்ஸலா ரகு பத்மா சேஷாத்திரி பள்ளியின் 48 வது ஆண்டு நினைவு முதல் நாள் கவரை வெளியிட்டார்.
சுதர்ஸன் ஸ்ரீநிவாஸ் நுங்கம்பாக்கம் பத்மா சேஷாத்திரி பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் என்னுடைய இரண்டாவது வாரிசு.

Wednesday, November 23, 2005

என்னுடைய ரங்கோலி


என்னுடைய இன்னொரு ரங்கோலி. இது இந்த வருஷம் ந்வராத்திரி கொலுவில் போடப்பட்டது. விமரிசனங்கள் வரவேற்கப்படுகிறன.

Monday, November 21, 2005

மன்னுகுறுங்குடியாய்

திருக்குறுங்குடி நம்பிராயர் சன்னிதி

'மன்னு குறுங்குடியாய் வெள்ளரையாய் மதிள் சூழ் சோலைமலைக்கரசே கண்ணபுரத்தமுதே' -

பெரியாழ்வார் பாடிய நான்கு இடங்களுக்கும் நான் மேற் சொன்ன வரிசை மாறி போயிருக்கிறேன். கோன் பனேகா குரோர்பதி யில் சொல்வது போல் வரிசைப்படித்தினால் நான் முதலில் சோலைமலை, அடுத்து வெள்ளரை, பின்பு குறுங்குடி கடைசியாக கண்ணபுரம் என்று சென்றிருக்கிறேன். ஆனாலும் ஆழ்வார் வரிசைப் படுத்தியபடி இந்த ஊர்களைப் பற்றி எழுத நினைக்கிறேன்.
முதலில் திருக்குறுங்குடி-
சென்ற மாதம் இங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
பெருமாள் அழகிய நம்பி என்ற சுந்தர பரிபூரணர். சுதையினால் ஆன மூர்த்தி. மிக அழகான பெருமாள். நம்மாழ்வார் இந்த நம்பியிடம் ஈடுபட்டு இவ்வாறு பாடுகிறார்.

எங்கனேயோ அன்னைமீர்காள்! என்னை முனிவது நீர்
நங்கள் கோலத்திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும் தாமரைக்கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் னெஞ்சமே.

உண்மையில் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் அழகு இந்த பெருமான். தாயார் குறுங்குடி வல்லி.

இங்கு பெருமான் கிடந்த நம்பி மற்றும் இருந்த நம்பி என்று மேலும் இரண்டு கோலங்களில் சேவை சாதிக்கிறார்.

கோவிலுக்குள் அமைந்திருந்த திருமங்கை யாழ்வாரால் பாடப் பெற்ற 'பக்கம் நின்றாரான' மகேந்திரகிரி நாதர் என்ற சிவனின் கோவில் மாலிக்காபூர் படையெடுத்தாற் போல் இடிக்கப் பட்டிருக்கிறது. இந்த விஷயம் பெரிய சர்ச்சையாக முடிந்து நீதிமன்ற்த்தில் நிலுவையில் இருக்கிற்து. மகேந்திரகிரி நாதர் தான்யாதி வாஸம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த ஸ்தலம் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் மற்றும் பெரியாழ்வார் ஆகிய நான்கு பேர்களால் பாடப்பெற்றது.

கரண்டுமாடு பொய்கையில் கரும்பனைப் பெரும்பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்
என்று திருமழிசையாழ்வாரும்
முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை
மூவா மூவுலகும் கடந்தப்பால் நின்ற
அளப்பரிய ஆரமுதை
என்று திருமங்கையாழ்வாரும் பெருமாளைக் கொண்டாடுகின்றனர்.
கோவிலுக்கு வெளியில் தனிக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் திருப்பாற்க்கடல் ந்ம்பியை சேவிக்க முடியவில்லை. மலைமேல் நம்பியை முன்பு சேவித்திருக்கிறேன். இப்போது முடியவில்லை.
மிகப் பெரிய சன்னிதி.
இந்த நம்பியே நம்மாழ்வாராக அவதரித்தவர். இந்த க்ஷேத்திரத்தில் தான் திருமங்கையாழ்வார் பரமபதத்திற்கு எழுந்தருளினார். நம்பி ராமானுஜரின் சீடனாக வந்து மந்திர உபதேசம் பெற்று வைஷ்ணவ நம்பி என்ற திருநாமம் பெற்றார்.
இந்த நம்பி நம்பாடுவான் என்ற பாணர் குலத்து பக்தனுக்கு அருள் புரிந்தவர் என்று இவ்வூரின் தல புராணம் இவ்வாறு விவரிக்கிறது.
நம்பாடுவான் என்ற் பாணர் குலத்து பக்தன் கார்த்திகை மாதம் சுக்ல ஏகாதசி அன்று நம்பியைச் சேவிக்கப்போகும் பொழுது ஒரு பிரம்மராக்ஷஸனால் பிடித்துக் கொள்ளப்படுகிறான். மிகுந்த மன்றாடல் மற்றும் சத்திய பிரமாணங்களுக்குப் பிறகு ந்ம்பியை சேவித்து விட்டு வருவதாக கூறிய நம்பாடுவானை பிரம்மராக்ஷஸன் அனுமதிக்கிறான். தான் கூறிய படி, நம்பியே ஒரு கிழவனாக வந்து தடுத்தும் கேளாமல் நம்பாடுவான் பிரம்ம ராக்ஷஸனிடம் திரும்பி வந்து தன்னைப் புசிக்குமாறு கூறுகிறான். வாக்குத் தவறாத நம்பாடுவானை பிரம்மராக்ஷஸன் விடுவித்து விட்டு நம்பாடுவானின் புண்ணியத்தில் ஒரு பகுதியால் ஒரு சாபத்தால் பெற்ற தன்னுடைய ராக்ஷஸ சரீரத்தை விட்டு மோக்ஷம் அடைகிறான்.

இன்றும் இவ்வூரில் கார்த்திகை மாதம் சுக்ல ஏகாதசி அன்று இந்த சம்பவம் நாடக வடிவில் கோவிலின் கைசிக ஏகாதசி மண்டபத்தில் நிகழ்த்தப் படுகிறது.
இக்கோவில் திருக்குறுங்குடி ஜீயர் ஆதீனத்தில் இருக்கிறது.
இவ்வூரை புகழேந்திப் புலவரும் ஒட்டக்கூத்தரும் பாடியிருகிறார்கள்.
இவ்வூரின் கோபுரத்தில் மிக அருமையான அபூர்வமான சிற்பங்கள் ஏராளமாக இருக்கின்றன. அனைத்தும் அழகான புடைப்புச் சிற்பங்கள் (Boss Releif).
இனி இவ்வூரின் சிற்பங்களைப் பற்றி வரும் பதிவுகளில் எழுத நினைக்கிறேன்.

நம்பியைத் தென்குறுங்குடி நின்றவச்
செம்பொனே திகழும் திருமூர்த்தியை
உம்பர் வானவர் ஆதியஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பனோ. - நம்மாழ்வார்.

Sunday, November 20, 2005

'ங' ப்போல் வளை

'ங' ப்போல் வளை

ஆத்திசூடியின் இந்த வார்த்தைக்கு என்ன பொருள்?

தமிழில் 'ங' வர்க்கத்தில் 'ங்' என்ற எழுத்து தவிர எதுவுமே வழக்கத்தில் இல்லை. (சங்கு, தங்கம்). இந்த எழுத்தும் இல்லமலிருந்தால் 'ங' வர்க்கமே தமிழ் எழுத்துக்களிலிருந்து எடுக்கப்பட்டிருக்கும். ஒரு எழுத்து அதன் வர்க்கத்தையே காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. அவ்வாறு ஒருவன் தன்னை சேர்ந்தவர்களை காப்பாற்ற வேண்டும் என்று பொருள். தமிழில் 'வளைதல்' என்றால் காப்பாற்றுதல் என்று ஒரு பொருள் உண்டு.

Saturday, November 19, 2005

புது வீடு

புது வீடு


நேற்று (18-11-2005) அன்று ஆழ்வார்திருந்கரியில் மாடத்தெரு வீடு பத்திரப் பதிவு முடிந்தது. சற்றுப் பெரிய வீடு. ஆழ்வார் புறப்பாடு கண்டருளும் வீதி. நல்ல விதமாக முடிந்தது. பொலிந்துநின்றபிரான், ஆழ்வார் சேவை நன்கு கிடைத்தது. மாலை 6.30 க்கு நெல்லை எக்ஸ்பிரஸ் பிடித்து இன்று காலை சென்னை வந்து சேர்ந்தாயிற்று.

Friday, November 11, 2005

லோககுரு


லோகாசார்யாய குரவே க்ருஷ்ணபாதஸ்ய ஸூநவே

ஸம்சாரபோகி ஸந்துஷ்ட ஜீவ ஜீவாதவே நம:


ஸ்ரீ பிள்ளை லோகசாரியாரின் 800 வது திருநக்ஷதிரம் தொடர்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மூன்று நாள் நிகழ்ச்சியில் இரண்டாம் நாளான இன்று சித்தப்பா டாக்டர். அ.திருவேங்கடத்தான் அவர்கள் ப்ரமேயசேகரம் என்ற் தலைப்பில் நிகழ்த்திய உரை மிக நன்றாக இருந்தது. இந்த நூலைப்பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன். மிகத் தெளிவாக அருமையாக இருந்தது. பிரபன்னனின் அர்ச்சராதி மார்க்கம் மிக அழகாக லோககுருவால் சொல்லப் பட்டதை மிகத் தெளிவாக எளிமையாக எடுத்துக் கூறிய விதம் அருமை.

Wednesday, November 09, 2005

மன்னுகுறுங்குடியாய்


அருச்சுனன் நாராயணனை மனத்தில் தியானித்து வில்லை யெடுத்தான். நாணையும் ஏற்றினான். சபை ஆச்சரியத்தில் மூழ்கி நிசப்தமாக இருந்தது. எய்த ஐந்து பாணங்கள் சுழலும் யந்திரத்தின் வழியாகச் சென்றன. மேலே கட்டியிருந்த லக்ஷியம்அறுந்து கீழே விழுந்தது. வாத்தியங்கள் முழங்கின.
ராஜாஜியின் வியாசர் விருந்து - திரெளபதி சுயம்வரம்
திருக்குறுங்குடியில் கோபுரத்தில் அர்ஜுனன் வில்லில் நாண் ஏற்றும் காட்சி.

Monday, November 07, 2005

திருக்குறுங்குடி




ஒரு நாள் வடக்கிலிருந்து வீசிக்கொண்டிருந்த காற்றில் அடிக்கப்பட்டு ஒரு திவ்யமான மலர் பாஞ்சாலியிடம் வந்து விழுந்தது. அந்த புஷ்பத்தைத் திரெளபதி கையில் எடுத்து அதன் அழகினாலும் வாசனையலும் பரவசமானாள்.

"பீமசேனா! இந்த மலரைப் பார், என்ன வாசனை! என்ன அழகு! இதைத் தருமபுத்திரனுக்குக் கொடுப்பேன். நீ சென்று இந்த வகையைச் சேர்ந்த இன்னும் சில புஷ்பங்களை பறித்துக்கொண்டு வா! நம்முடைய காம்யக வனத்தில் இந்த செடியைக் கொண்டு போய் வளர்க்க வேண்டும்" என்றாள். இவ்வாறு பீமனுக்குச் சொல்லிவிட்டு திரெளபதி புஷ்பத்துடன் யுதிஷ்டிரனிடம் ஓடினாள்.


காதலி சொன்ன சொல்லால் ஏவப்பட்ட பீமன் அந்த மலர் உண்டான செடியைத் தேடிக்கொண்டு சென்றான். மலரின் வாசனையைக் காற்றில் நுகர்ந்து கொண்டே அந்த திக்கில் வெகு தூரம் தனியாகப் போனான். வழியில் அனேக காட்டு மிருகங்களைக் கண்டாலும் லட்சியம் செய்யாமல் சென்றான்.

பருவதத்தாழ்வரையில் ஒரு பெரிய வாழைமரச்சோலையை அடைந்தான். சோலையின் நடுவில் வழியை அடைத்துக் கொண்டு நெருப்பைப் போல் பிரகாசித்துக் கொண்டு ஒரு வானரம் தனிமையாகப் படுத்திருப்பதைக் கண்ட பீமன் தன்னையும் அறியாமல் ஒரு பெரிய சத்தம் போட்டான்.

வானரம் தன் கண்களைச் சிறிது திறந்து அலட்சியமாகப் பீமனைப் பார்த்து, "எனக்கு உடம்பு சரியாக இல்லை. படுத்திருக்கிறேன். நீ ஏன் என்னை எழுப்புகிறாய்? மனிதனாகிய நீ அறிவு படைத்திருக்கிறாய். விலங்குகளாகிய எங்க்ளுக்குப் பகுத்தறிவு இல்லை. பகுத்தறிவு படைத்திருக்கும் மனிதர்கள் பிராணிகளிடம் கருணை காட்டுவது முறை. உன்னைப் போன்ற புத்திமான்கள் மிருகங்களை இம்சிக்கலாகாது. நீ தருமத்தை அறியவில்லை போலிருக்கிறது! நீ யார்? எங்கே போக வந்திருக்கிறாய்? இமயமலையில் இதற்கு மேல் செல்ல முடியாது. இது தேவலோகத்திற்குச் செல்லும் பாதை. மனிதர்கள் இதைத் தாண்டிப்போக முடியது. உன் வரவு நல்வரவு ஆகுக. நீ இங்கே பழங்களைப் புசித்து விட்டுத் திரும்பு. நான் சொல்வதைக் கேள்" என்றது.

பீமனுக்குக் கோபம் பொங்கியது. "நீ யார்? இவ்வளவு பேசுகிறாய்! நான் கஷத்திரியன். குரு வம்சத்தில் பிறந்த வீரன். குந்தி தேவியின் மகன். வாயு புத்திரன் என்று என்னை அறிவாயக! என்னத் தடுக்கதே. வழியை விட்டு விலகு!" என்றான்

வானரம் இந்தப்பேச்சைக் கேட்டு கொஞ்சம் புன்சிரிப்புச் செய்தது. "நான் ஒரு குரங்கு. இந்த வழியில் செல்வாயானால் நீ நாசத்தை அடைவாய்" என்றது.

பீமசேனன் "வானரமே! நான் நாசமடைந்தாலும் சரி. ஏதானாலும் சரி. உன்னை நான் கேட்கவில்லை. எனக்குக் கோபம் உண்டாக்க வேண்டாம்" என்றான்.

"எனக்கு எழுந்திருக்க சக்தியில்லை. கிழக்குரங்கு. அவசியம் போகவேண்டுமானால் என்னைத் தாண்டிச்செல்வாயாக" என்றது வானரம்.

"பிராணியைத்தாண்டிச்செல்லலாகாது என்பது சாஸ்திரம். ஆகையால் நான் உன்னைத் தாண்டிச்செல்லவில்லை. இல்லாவிடில் ஹனுமான் சமுத்திரத்த்தை தாண்டியது போல் உன்னையும் மலையையும் ஒரே பாச்சலாய்த் தாவிச்சென்றிருப்பேன்" என்றான் பீமன்.

"நரசிரேஷ்டனே! கடலைத்தாண்டிய அந்த ஹனுமான் யார்? உனக்குத் தெரிந்திருந்தால் சொல்ல வேண்டும்" என்றது வானரம்.

"ராம பத்தினியைத் தேடுவதற்காக நூறு யோசனை அகலமுள்ள கடலைத் தாண்டியவனும், எனக்கு அண்ணனுமான ஹனுமானை உனக்குத் தெரியாதா? பலத்திலும் நான் அவனுக்குச் சமானமாவேன். ஒரு காரியமாக நான் இங்கே வந்திருக்கிறேன். வழியை விடு. எழுந்திரு. நான் சொன்னதைக் கேளாயாகில் உன்னை யமலோகத்திற்கு அனுப்புவேன்" என்று பீமன் வானரத்தை அதட்டினான்.

"வீரனே! தோஷமற்றவனே! கோபம் தணிவாயாக. முதுமையால் எனக்கு எழுந்திருக்கச் சக்தி இல்லை. என்னைத் தாண்டிச்செல்வதில் உனக்கு ஆட்சேபணை இருந்தால் என்மேல் கருணை கொண்டு இந்த வாலை நகர்த்தி விட்டுச் செல்வாயக" என்றது வானரம்.

தன்னுடைய புஜபலத்தில் கர்வங்கொண்ட பீமன், இவ்வாறு சொல்லப்பட்டவுடன், 'இந்தக் குரங்கை வாலைப் பிடித்து இழுத்து அப்புறம் தள்ளலாம்" என்று எண்ணி அதன் வாலைப் பிடித்தான்.

வாலை அசைப்பதற்கே முடியவில்லை! பீமன் வியப்படைத்ந்தான். இரு கைகளையும் கொண்டு இழுத்துப் பர்த்தான். புருவங்கள் நெறித்து, விழி பிதுங்கி உடல் வியர்த்தது. வாலைத் தூக்கக் கூட முடியவில்லை. வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நின்றான்.

"நீ யார்? என்னைப் பொறுக்கவேண்டும். நீர் சித்தரா? தேவரா? கந்தர்வரா? நீர் யார்? சிஷ்யன் கேட்கிறேன். சரணம்" என்றான் பீமன். பலவானைக் கண்டால் பீமனுக்கு உடனே பக்தி.

"தமரைக் கண்ணனே! பண்டவ வீரனே! சர்வலோகங்களுக்கும் பிராண ஆதாரமான வாயுவின் மகன் ஹனுமான் நான்தான். தம்பி பீமா! யக்ஷரும் ராக்ஷதர்களும் இருக்கும் இந்த வழியில் நீ சென்றால் ஆபத்துக்கு ஆளாவாய் என்று உன்னை நான் தடுத்தேன். இது தேவலோகம் போகும் வழி. இதில் மனிதர்கள் செல்ல முடியாது. நீ தேடி வந்த செளகந்திகச் செடி இருக்கும் நீரோடையும் மடுவும் அதோ பார்" என்றான் ஹனுமான்.

நன்றி- ராஜாஜியின் வியாசர் விருந்து - பீமனும் ஹனுமானும்
திருக்குறுங்குடியில் கோபுரத்தில் அமைந்துள்ள ஒரு சிற்பம்-
பீமனும் ஹனுமானும்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது