vishnuchittan

Monday, November 21, 2005

மன்னுகுறுங்குடியாய்

திருக்குறுங்குடி நம்பிராயர் சன்னிதி

'மன்னு குறுங்குடியாய் வெள்ளரையாய் மதிள் சூழ் சோலைமலைக்கரசே கண்ணபுரத்தமுதே' -

பெரியாழ்வார் பாடிய நான்கு இடங்களுக்கும் நான் மேற் சொன்ன வரிசை மாறி போயிருக்கிறேன். கோன் பனேகா குரோர்பதி யில் சொல்வது போல் வரிசைப்படித்தினால் நான் முதலில் சோலைமலை, அடுத்து வெள்ளரை, பின்பு குறுங்குடி கடைசியாக கண்ணபுரம் என்று சென்றிருக்கிறேன். ஆனாலும் ஆழ்வார் வரிசைப் படுத்தியபடி இந்த ஊர்களைப் பற்றி எழுத நினைக்கிறேன்.
முதலில் திருக்குறுங்குடி-
சென்ற மாதம் இங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
பெருமாள் அழகிய நம்பி என்ற சுந்தர பரிபூரணர். சுதையினால் ஆன மூர்த்தி. மிக அழகான பெருமாள். நம்மாழ்வார் இந்த நம்பியிடம் ஈடுபட்டு இவ்வாறு பாடுகிறார்.

எங்கனேயோ அன்னைமீர்காள்! என்னை முனிவது நீர்
நங்கள் கோலத்திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும் தாமரைக்கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் னெஞ்சமே.

உண்மையில் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் அழகு இந்த பெருமான். தாயார் குறுங்குடி வல்லி.

இங்கு பெருமான் கிடந்த நம்பி மற்றும் இருந்த நம்பி என்று மேலும் இரண்டு கோலங்களில் சேவை சாதிக்கிறார்.

கோவிலுக்குள் அமைந்திருந்த திருமங்கை யாழ்வாரால் பாடப் பெற்ற 'பக்கம் நின்றாரான' மகேந்திரகிரி நாதர் என்ற சிவனின் கோவில் மாலிக்காபூர் படையெடுத்தாற் போல் இடிக்கப் பட்டிருக்கிறது. இந்த விஷயம் பெரிய சர்ச்சையாக முடிந்து நீதிமன்ற்த்தில் நிலுவையில் இருக்கிற்து. மகேந்திரகிரி நாதர் தான்யாதி வாஸம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த ஸ்தலம் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் மற்றும் பெரியாழ்வார் ஆகிய நான்கு பேர்களால் பாடப்பெற்றது.

கரண்டுமாடு பொய்கையில் கரும்பனைப் பெரும்பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்
என்று திருமழிசையாழ்வாரும்
முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை
மூவா மூவுலகும் கடந்தப்பால் நின்ற
அளப்பரிய ஆரமுதை
என்று திருமங்கையாழ்வாரும் பெருமாளைக் கொண்டாடுகின்றனர்.
கோவிலுக்கு வெளியில் தனிக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் திருப்பாற்க்கடல் ந்ம்பியை சேவிக்க முடியவில்லை. மலைமேல் நம்பியை முன்பு சேவித்திருக்கிறேன். இப்போது முடியவில்லை.
மிகப் பெரிய சன்னிதி.
இந்த நம்பியே நம்மாழ்வாராக அவதரித்தவர். இந்த க்ஷேத்திரத்தில் தான் திருமங்கையாழ்வார் பரமபதத்திற்கு எழுந்தருளினார். நம்பி ராமானுஜரின் சீடனாக வந்து மந்திர உபதேசம் பெற்று வைஷ்ணவ நம்பி என்ற திருநாமம் பெற்றார்.
இந்த நம்பி நம்பாடுவான் என்ற பாணர் குலத்து பக்தனுக்கு அருள் புரிந்தவர் என்று இவ்வூரின் தல புராணம் இவ்வாறு விவரிக்கிறது.
நம்பாடுவான் என்ற் பாணர் குலத்து பக்தன் கார்த்திகை மாதம் சுக்ல ஏகாதசி அன்று நம்பியைச் சேவிக்கப்போகும் பொழுது ஒரு பிரம்மராக்ஷஸனால் பிடித்துக் கொள்ளப்படுகிறான். மிகுந்த மன்றாடல் மற்றும் சத்திய பிரமாணங்களுக்குப் பிறகு ந்ம்பியை சேவித்து விட்டு வருவதாக கூறிய நம்பாடுவானை பிரம்மராக்ஷஸன் அனுமதிக்கிறான். தான் கூறிய படி, நம்பியே ஒரு கிழவனாக வந்து தடுத்தும் கேளாமல் நம்பாடுவான் பிரம்ம ராக்ஷஸனிடம் திரும்பி வந்து தன்னைப் புசிக்குமாறு கூறுகிறான். வாக்குத் தவறாத நம்பாடுவானை பிரம்மராக்ஷஸன் விடுவித்து விட்டு நம்பாடுவானின் புண்ணியத்தில் ஒரு பகுதியால் ஒரு சாபத்தால் பெற்ற தன்னுடைய ராக்ஷஸ சரீரத்தை விட்டு மோக்ஷம் அடைகிறான்.

இன்றும் இவ்வூரில் கார்த்திகை மாதம் சுக்ல ஏகாதசி அன்று இந்த சம்பவம் நாடக வடிவில் கோவிலின் கைசிக ஏகாதசி மண்டபத்தில் நிகழ்த்தப் படுகிறது.
இக்கோவில் திருக்குறுங்குடி ஜீயர் ஆதீனத்தில் இருக்கிறது.
இவ்வூரை புகழேந்திப் புலவரும் ஒட்டக்கூத்தரும் பாடியிருகிறார்கள்.
இவ்வூரின் கோபுரத்தில் மிக அருமையான அபூர்வமான சிற்பங்கள் ஏராளமாக இருக்கின்றன. அனைத்தும் அழகான புடைப்புச் சிற்பங்கள் (Boss Releif).
இனி இவ்வூரின் சிற்பங்களைப் பற்றி வரும் பதிவுகளில் எழுத நினைக்கிறேன்.

நம்பியைத் தென்குறுங்குடி நின்றவச்
செம்பொனே திகழும் திருமூர்த்தியை
உம்பர் வானவர் ஆதியஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பனோ. - நம்மாழ்வார்.

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது