vishnuchittan

Monday, November 07, 2005

திருக்குறுங்குடி




ஒரு நாள் வடக்கிலிருந்து வீசிக்கொண்டிருந்த காற்றில் அடிக்கப்பட்டு ஒரு திவ்யமான மலர் பாஞ்சாலியிடம் வந்து விழுந்தது. அந்த புஷ்பத்தைத் திரெளபதி கையில் எடுத்து அதன் அழகினாலும் வாசனையலும் பரவசமானாள்.

"பீமசேனா! இந்த மலரைப் பார், என்ன வாசனை! என்ன அழகு! இதைத் தருமபுத்திரனுக்குக் கொடுப்பேன். நீ சென்று இந்த வகையைச் சேர்ந்த இன்னும் சில புஷ்பங்களை பறித்துக்கொண்டு வா! நம்முடைய காம்யக வனத்தில் இந்த செடியைக் கொண்டு போய் வளர்க்க வேண்டும்" என்றாள். இவ்வாறு பீமனுக்குச் சொல்லிவிட்டு திரெளபதி புஷ்பத்துடன் யுதிஷ்டிரனிடம் ஓடினாள்.


காதலி சொன்ன சொல்லால் ஏவப்பட்ட பீமன் அந்த மலர் உண்டான செடியைத் தேடிக்கொண்டு சென்றான். மலரின் வாசனையைக் காற்றில் நுகர்ந்து கொண்டே அந்த திக்கில் வெகு தூரம் தனியாகப் போனான். வழியில் அனேக காட்டு மிருகங்களைக் கண்டாலும் லட்சியம் செய்யாமல் சென்றான்.

பருவதத்தாழ்வரையில் ஒரு பெரிய வாழைமரச்சோலையை அடைந்தான். சோலையின் நடுவில் வழியை அடைத்துக் கொண்டு நெருப்பைப் போல் பிரகாசித்துக் கொண்டு ஒரு வானரம் தனிமையாகப் படுத்திருப்பதைக் கண்ட பீமன் தன்னையும் அறியாமல் ஒரு பெரிய சத்தம் போட்டான்.

வானரம் தன் கண்களைச் சிறிது திறந்து அலட்சியமாகப் பீமனைப் பார்த்து, "எனக்கு உடம்பு சரியாக இல்லை. படுத்திருக்கிறேன். நீ ஏன் என்னை எழுப்புகிறாய்? மனிதனாகிய நீ அறிவு படைத்திருக்கிறாய். விலங்குகளாகிய எங்க்ளுக்குப் பகுத்தறிவு இல்லை. பகுத்தறிவு படைத்திருக்கும் மனிதர்கள் பிராணிகளிடம் கருணை காட்டுவது முறை. உன்னைப் போன்ற புத்திமான்கள் மிருகங்களை இம்சிக்கலாகாது. நீ தருமத்தை அறியவில்லை போலிருக்கிறது! நீ யார்? எங்கே போக வந்திருக்கிறாய்? இமயமலையில் இதற்கு மேல் செல்ல முடியாது. இது தேவலோகத்திற்குச் செல்லும் பாதை. மனிதர்கள் இதைத் தாண்டிப்போக முடியது. உன் வரவு நல்வரவு ஆகுக. நீ இங்கே பழங்களைப் புசித்து விட்டுத் திரும்பு. நான் சொல்வதைக் கேள்" என்றது.

பீமனுக்குக் கோபம் பொங்கியது. "நீ யார்? இவ்வளவு பேசுகிறாய்! நான் கஷத்திரியன். குரு வம்சத்தில் பிறந்த வீரன். குந்தி தேவியின் மகன். வாயு புத்திரன் என்று என்னை அறிவாயக! என்னத் தடுக்கதே. வழியை விட்டு விலகு!" என்றான்

வானரம் இந்தப்பேச்சைக் கேட்டு கொஞ்சம் புன்சிரிப்புச் செய்தது. "நான் ஒரு குரங்கு. இந்த வழியில் செல்வாயானால் நீ நாசத்தை அடைவாய்" என்றது.

பீமசேனன் "வானரமே! நான் நாசமடைந்தாலும் சரி. ஏதானாலும் சரி. உன்னை நான் கேட்கவில்லை. எனக்குக் கோபம் உண்டாக்க வேண்டாம்" என்றான்.

"எனக்கு எழுந்திருக்க சக்தியில்லை. கிழக்குரங்கு. அவசியம் போகவேண்டுமானால் என்னைத் தாண்டிச்செல்வாயாக" என்றது வானரம்.

"பிராணியைத்தாண்டிச்செல்லலாகாது என்பது சாஸ்திரம். ஆகையால் நான் உன்னைத் தாண்டிச்செல்லவில்லை. இல்லாவிடில் ஹனுமான் சமுத்திரத்த்தை தாண்டியது போல் உன்னையும் மலையையும் ஒரே பாச்சலாய்த் தாவிச்சென்றிருப்பேன்" என்றான் பீமன்.

"நரசிரேஷ்டனே! கடலைத்தாண்டிய அந்த ஹனுமான் யார்? உனக்குத் தெரிந்திருந்தால் சொல்ல வேண்டும்" என்றது வானரம்.

"ராம பத்தினியைத் தேடுவதற்காக நூறு யோசனை அகலமுள்ள கடலைத் தாண்டியவனும், எனக்கு அண்ணனுமான ஹனுமானை உனக்குத் தெரியாதா? பலத்திலும் நான் அவனுக்குச் சமானமாவேன். ஒரு காரியமாக நான் இங்கே வந்திருக்கிறேன். வழியை விடு. எழுந்திரு. நான் சொன்னதைக் கேளாயாகில் உன்னை யமலோகத்திற்கு அனுப்புவேன்" என்று பீமன் வானரத்தை அதட்டினான்.

"வீரனே! தோஷமற்றவனே! கோபம் தணிவாயாக. முதுமையால் எனக்கு எழுந்திருக்கச் சக்தி இல்லை. என்னைத் தாண்டிச்செல்வதில் உனக்கு ஆட்சேபணை இருந்தால் என்மேல் கருணை கொண்டு இந்த வாலை நகர்த்தி விட்டுச் செல்வாயக" என்றது வானரம்.

தன்னுடைய புஜபலத்தில் கர்வங்கொண்ட பீமன், இவ்வாறு சொல்லப்பட்டவுடன், 'இந்தக் குரங்கை வாலைப் பிடித்து இழுத்து அப்புறம் தள்ளலாம்" என்று எண்ணி அதன் வாலைப் பிடித்தான்.

வாலை அசைப்பதற்கே முடியவில்லை! பீமன் வியப்படைத்ந்தான். இரு கைகளையும் கொண்டு இழுத்துப் பர்த்தான். புருவங்கள் நெறித்து, விழி பிதுங்கி உடல் வியர்த்தது. வாலைத் தூக்கக் கூட முடியவில்லை. வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நின்றான்.

"நீ யார்? என்னைப் பொறுக்கவேண்டும். நீர் சித்தரா? தேவரா? கந்தர்வரா? நீர் யார்? சிஷ்யன் கேட்கிறேன். சரணம்" என்றான் பீமன். பலவானைக் கண்டால் பீமனுக்கு உடனே பக்தி.

"தமரைக் கண்ணனே! பண்டவ வீரனே! சர்வலோகங்களுக்கும் பிராண ஆதாரமான வாயுவின் மகன் ஹனுமான் நான்தான். தம்பி பீமா! யக்ஷரும் ராக்ஷதர்களும் இருக்கும் இந்த வழியில் நீ சென்றால் ஆபத்துக்கு ஆளாவாய் என்று உன்னை நான் தடுத்தேன். இது தேவலோகம் போகும் வழி. இதில் மனிதர்கள் செல்ல முடியாது. நீ தேடி வந்த செளகந்திகச் செடி இருக்கும் நீரோடையும் மடுவும் அதோ பார்" என்றான் ஹனுமான்.

நன்றி- ராஜாஜியின் வியாசர் விருந்து - பீமனும் ஹனுமானும்
திருக்குறுங்குடியில் கோபுரத்தில் அமைந்துள்ள ஒரு சிற்பம்-
பீமனும் ஹனுமானும்

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது