vishnuchittan

Thursday, February 23, 2006

மன்னு குறுங்குடியாய்

நம்பியைத் தென்குறுங்குடி நின்றவச்
செம்பொனே திகழும் திருமூர்த்தியை

திருக்குறுங்குடியில் ந்ம்பிராயர் சன்னிதியின் உட் கோபுர வாசலில் அமைந்துள்ள இரண்டு அழகான சிற்பங்கள். இந்த யானையையும் குதிரையையும் நன்கு உற்றுப்பார்த்தால் பலவித நிலைகளில் இருக்கும் பெண்களாலேயே உருவாக்கப் பட்டிருப்பது தெரியவரும். நல்ல கற்பனைத்திறன் கொண்ட சிற்பியால் உருவாக்கப்பட்ட அருமையான சிற்பங்கள்.

Tuesday, February 14, 2006

மன்னுகுறுங்குடியாய் 3


'தென்னன் குறுங்குடியில் செம்பவளக் குன்றினை'

திருக்குறுங்குடியின் கோபுரத்தின் இடது வெளிப்புறத்தில் அமைந்துள்ள அருமையான கஜேந்திர மோட்சம் புடைப்புச் சிற்பம்.


மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான்
வேட்கையினோடு சென்றிழிந்த
கானமர் வேழம் கையெடுத்தலறக்
கராவதன் காலினைக்கதுவ
ஆனையின் துயரம் தீரப்புள்ளூர்ந்து
சென்று நின்றாழி தொட்டான்.

ஒரு காலத்தில் இந்திரத்துய்மன் என்ற அரசன் ஒரு சாபத்தால் யானையாக பிறக்கிறான். ஆனாலும் பகவான் நாராயணனிடம் மிகுந்த பக்தி உடையதாக அந்த யானை இருந்தது. தினமும் பகவானுக்கு தாமரை மலர்களைப் பறித்து சமர்ப்பித்து வழிபட்டு வந்தது. ஒரு நாள் அந்த யானை தாமரை மலரைப் பறித்ததும் ஒரு முதலை அதன் காலைப் பிடித்து தண்ணீருள் இழுத்தது. பகவானுக்கு என்று பறித்த மலர் வாடி விடுவதற்குள் அவன் திருவடிகளில் சமர்ப்பித்து விட வேண்டுமே என்று பதறிய யானை முதலையைக் கரைக்கு இழுத்தது. வெகுநேரம் போராடிய பிறகு முதலையிடம் தோற்றுப்போன யானை ஆதிமூலமே என்று பகவானிடம் சரணடைந்து கூப்பிடுகிறது. அப்பொழுது பகவான் கருடன் மேல் ஏறி தானே அந்தப்பொய்கைக் கரைக்கு வந்து தன் சக்கரத்தால் அந்த முதலையைக் கொன்று யானையைக் காப்பாற்றுகிறான். ஒரு ஐந்தறிவு படைத்த யானைக்கு அதற்குத் தன் மேல் உள்ள பக்தியினால் தானே நேரில் சென்று அதன் துயரத்தைத் தீர்த்ததை எல்லா ஆழ்வார்களுமே கொண்டாடிப் பாடுகிறார்கள்.

திருமங்கையாழ்வார்

கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை
வைகுதாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணமோர் முழுவலிமுதலை பற்ற
மற்றது நின் சரண் நினைப்ப
கொடியவாய் விலங்கினுயிர்மலங்கக்
கொண்ட சீற்றமொன்றுண்டு

என்று பக்தனுக்கு ஏற்பட்ட துயரத்தைப் போக்க ஓடி வந்த பகவானின் கோபத்தைக் கொண்டாடுகிறார்.

தொண்டரடிப்பொடியாழ்வார்

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் கான்பான்
எண்ணிலாவூழியூழி தவஞ்செய்தார் வெள்கிநிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைகன்றருளையீந்த
கண்ணறா

என்று வியக்கிறார்.

ஒரு வாரணம் பணி கொண்டான் பொய்கையில்

- பெரியாழ்வார்.

இந்த கஜேந்திரனான யானை பகவானை 'ஆதிமூலமே' என்று அழைத்ததாகத் தான் பொதுவாகக் கூறப்படுகிறது. ஆனால் திருமங்கையாழ்வார் தன் திரு மடலில் கஜேந்திரன்


போரானை பொய்கை வாய் கோட்பட்டு நின்றலறி
நீரார் மலர்க்கமலம் கொண்டோர் நெடுங்கையால்
நாராயணா! ஓ மணிவண்ணா நாகணையாய்
வாராய் என் ஆரிடரை நீக்காய்- எனவெகுண்டு
தீராத சீற்றத்தால் சென்றிரண்டு கூறாக
ஈராவதனை இடர் கடிந்தான் எம்பெருமான்

என்று இந்த சரித்திரத்தைக் கூறும் பொழுது 'நாராயணா! ஓ மணிவண்ணா நாகணையாய்' என்று கூவியழைத்ததாகக் கூறுகிறார்.

இந்த சிற்பத்தில் கஜேந்திரனும், பகவானும் ரிஷிகளும் மிக அழகாக செதுக்கப் பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

Saturday, February 04, 2006

பிரதிபிம்பம்

எனக்கு பிரதிபிம்பங்களை (Reflection) புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்.

இதோ நான் எடுத்த சில பிரதிபிம்பங்கள்
-


இது மைசூர் அருகிலுள்ள மேல்கோட்டையில் எடுத்தது.

இது மைசூர் லலித் மஹால் அரண்மனை - இப்போது இது ஒரு ஹோட்டல்.

இது தலைக் காவேரி

ஹரித்துவாரில் கங்கைக்கு ஆரத்தி நடைபெறுகிறது.

தாஜ்மஹால்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது