vishnuchittan

Wednesday, December 21, 2005

மன்னுகுறுங்குடியாய் 1


சொல்லில் திருவேயனையார் கனிவாய் எயிறொப்பான்
கொல்லை முல்லை மெல்லரும்பீனும் குறுங்குடியே.

திருக்குறுங்குடியிலுள்ள அழகிய பெண்களின் பற்கள் போன்று அவ்வூரின் தோட்டங்களில் முல்லைப்பூக்கள் மலர்ந்திருகின்றன என்று கொண்டாடுகிறார்
திருமங்கையாழ்வார். இங்கு உவமான உவமேயங்கள் அழகாக மாற்றிச்சொல்லப்பட்டிருக்கின்றன. இங்குள்ள பெண்களின் பற்கள் முல்லைப்பூக்கள் போன்று இருக்கின்றன என்று சொல்வதற்குப் பதில் இவ்வூர்ப் பெண்களின் பற்கள் போன்று முல்லைப்பூக்கள் மலர்ந்திருகின்றன என்று நயமாகக் கூறுகிறார்.

இவ்வூரின் கோபுரத்தில் உள்ள புடைப்புச் சிற்பங்களுள் இடது வெளிப்புறத்தில் மேலே உள்ள திருவிக்கிரமனின் அழகிய சிற்பம் அமைந்துள்ளது.

முன்னொரு காலத்தில் பிரஹலாதனின் பேரனான மஹாபலி என்ற அசுரன் இந்திரனை வென்று அவனுடைய இந்திர லோகத்தை தன்வசப்படுத்தி மூவுலகையும் ஆண்டு வந்தான். பிறவியிலேயே மிக நல்லவனான இவன் மிகுந்த தான தர்மங்களையும் செய்து வந்தவன். பதவியையும் நாட்டையும் இழந்த இந்திரன் பகவான் விஷ்ணுவிடம் முறையிட அவன் வேண்டு கோளுக்கு இரங்கி விஷ்ணு ஒரு சிறிய அந்தணன் வடிவம் எடுத்து மஹபலியிடம் யாசகம் (தர்மம்) கேட்கச் செல்கிறான்.

விஷ்ணு வாமனனாக காச்யப முனிவருக்கும் அதிதி தேவிக்கும் மகனாக உதித்ததை கம்பன் கூறும் பொழுது

காலம் நுனித்துணர் காச்யபனுக்கும்
வால் அதிதிக்கும் ஓர் மகவாக
நீலநிறத்து நெடுந்தகை வந்து
ஆலமர் வித்தின் அருங்குறளானான்

ஒரு பெரிய ஆலமரத்தையே தன்னுள் அடக்கியிருக்கும் ஆலம் விதை போன்று நீலநிறத்து நெடுந்தகையான பகவான் ஒரு சிறு பாலகனாக அவதாரம் செய்தான் என்கிறார். அதாவது இந்த வாமனன் பின்பு பெரிய உருவங்கொண்ட திருவிக்கிரமனாக வளரப்போகிறான் என்பதை குறிப்பால் உண்ர்த்துகிறார்.

இந்த இடத்தில் அதிவீரராம பாண்டியரின் வெற்றிவேற்கை வரிகள் நினைவுக்கு வருகிறது.

தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும்
அண்ணல் யானை அணிதேர் புரவி
ஆட்பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.

அதாவது மீன் முட்டையை விடச் சிறியதாக இருக்கும் ஆலமரத்தின் விதையானது மரமாக வளர்ந்தபின் மிகப்பெரிய யானை, தேர், குதிரை மற்றும் காலாட்படைகளோடு மன்னர்கள் தங்கும் அளவு நிழல் கொடுக்கும். ஒரு சிறு விதை ஒரு மரத்தையே தன்னுள் அடக்கியிருக்கிறது என்று பொருள்.

வந்த வாமனன் மஹபலியிடம் தன்னுடைய காலடியால் மூன்று அடி மண் தானமாகக் கேட்கிறான்.

மறுபடியும் கம்பன் இதோ

சிந்தையுவந்து எதிர் என் செய என்றான்
அந்தணன் மூவடி மண் அருள் உண்டேல்
வெந்திறல் இது வேண்டும் எனா முன்
தந்தனென் என்ற்னன் வெள்ளி தடுத்தான்.

மஹாபலி மூன்று அடி மண் தானமாகத் த்ந்தேன் என்று தன் கமண்டலத்திலிருந்து நீரை வாமனன் கையில் தாரையாக விடும் பொழுது அசுரகுருவான சுக்கிரன், வந்தவன் யார் என்று கூறி மஹாபலியை எச்சரித்து தடுக்கிறான். ஆனால் மஹாபலி பகவான் நாராயணனே தன்னிடம் வந்து தானம் கேட்கும் பொழுது அதை மறுக்கமாட்டேன் என்று

அடி ஒரு மூன்றும் நீ அளந்து கொள்க
எனநெடியவன் குறிய கை நீரில் நீட்டினான்.

இங்கு பெரியாழ்வார்

தக்கதிதுவன்றென்று தானம் விலக்கிய
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய
சக்கரக் கையனே

என்று தானம் தடுத்த வெள்ளியின் ஒரு கண்ணை வாமனன் தர்ப்பையால் கிளறிப் பறித்ததாகச் சொல்கிறார்.

மஹாபலி கையில் நீரை வார்த்ததும் வாமனன் மிகப்பெரிய வடிவத்துடன் திருவிக்கிரமனாக வானமும் மண்ணும் அடைத்து வளர்கிறான். ஒரு திருவடி மண் முழுவதும் அளக்கிறது. மற்றொரு திருவடி வான் நோக்கி வளர்ந்து சந்திர, சூரிய மற்றும் நட்சத்திர மண்டலங்களைக் கடந்து பிரம்மனின் சத்திய லோகம் வரை செல்கிறது. அங்கு பிரம்மன் தன் கமண்டலத்திலிருந்து ஆகாய கங்கையால் திருவடி விளக்கிய நீர் திருவிக்கிரமனின் சிறு விரலை
மட்டுமே நனைக்கிறது. இதோ திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகம் வாமனன் வளர்ந்த விதத்தை விவரிக்கிறது.

ஒண்மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப
ஒரு காலும் அவுணன் உள்ளத்து
எண் மதியும் கடந்து அண்ட மீது போகி
இருவிசும்பினூடு போய் எழுந்து மேலைத்
தண் மதியும் கதிரவனும் தவிரவோடி
தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை
மலர் புரையும் திருவடி

இன்று விஞ்ஞானம் ஒப்புக்கொண்டுள்ள படி முதலில் சந்திர பின்பு சூரிய அதன் பின்பு நட்சத்திர மண்டலங்களை பெருமானின் திருவடி கடந்து சென்றதாக ஆழ்வார் கூறியிருப்பது ஆச்சரியத்தோடு அனுபவிக்கத்தக்கது.

என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்
முன்னய வண்ணமே கொண்டளவாயென்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியனே

மஹாபலியின் மகனான நமுசி பகவானை முந்தைய வடிவமான வமனனாக மூன்றடி மண் அளந்து கொள் என்கிறான். அவனை திருவிக்கிரமன் வானில் சுழற்றியெறிந்ததாக பெரியாழ்வார் ஒரு சம்பவத்தைக் கூறுகிறார்

திருவிக்கிரமன் தன்னுடைய மூன்றாவது அடியை மஹாபலியின் தலையில் வைத்து அவனை பாதாளத்திற்கு அழுத்தி அதன் அதிபதியாக ஆக்குகிறான்.

உரியது இந்திரர்க்கு இது என்று உலகம் ஈந்து போய்
விரி திரைப் பாற்கடல் பள்ளி மேவினான்

தான் தானமாகப் பெற்ற உலகம் முழுவதும் இந்திரனுக்கு அளித்து விட்டு பகவான் தன் திருப்பாற்கடலுக்கு திரும்பிச் செல்கிறான்.

இந்த அவதாரத்தை நம்மாழ்வார் அழகாக தன் திருவாசிரியத்தில் இவ்வாறு கொண்டாடுகிறார்.

மாமுதல் அடிப்போ தொன்றுகவிழ்த் தலர்த்தி,
மண்முழுதும் அகப்படுத்து, ஒண்சுடர் அடிப்போது
ஒன்றுவிண் செலீஇ, நான்முகப் புத்தேள்
நாடுவியந் துவப்ப, வானவர் முறைமுறை
வழிபட நெறீஇ, தாமரைக் காடு
மலர்க்கண் ணோடு கனிவா யுடையது மாய்
இரு நாயிறா யிரம்மலர்ந் தன்ன
கற்பகக் காவு பற்பல வன்ன
முடிதோ ளாயிரம் தழைத்த
நெடியோய்க் கல்லதும் அடியதோ வுலகே?

இந்த அவதாரம் பகவான் நாராயணனின் திருவடிகளின் பெருமையைப் பேசுவதாகவே ஆழ்வார்கள் கொண்டாடுகின்றனர்.

ஆண்டாள் ' அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி' என்றும்

திருமங்கை மன்னன்

மன்னும் குறளுருவில் மாணியாய், - மாவலிதன்
பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து, போர்வேந்தர்
மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி,
என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண்,
மன்னா. தரு கென்று வாய்திறப்ப, - மற்றவனும்
என்னால் தரப்பட்ட தென்றலுமே, அத்துணைக்கண்
மின்னார் மணிமுடிபோய் விண்தடவ, மேலெடுத்த
பொன்னார் கனைகழற்கால் ஏழுலகும் போய்க்கடந்து,அங்
கொன்னா அசுரர் துளங்கச் செலநீட்டி,
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்து,
தன்னுலகம் ஆக்குவித்த தாளானை

என்றும் அவன் திருவடிகளையே பாடுகிறார்கள்.

இந்த முழு சரித்திரமும் மிக அழகாக மேலே காண்கின்ற சிற்பமாக திருக்குறுங்குடியில் கல்லில் உறைந்திருக்கிறது. பகவானின் ஊன்றிய திருவடி பூமியைப் பிளந்து கீழே சென்றிருக்கிறது. தூக்கிய திருவடியை பிரம்மன் தன் கமண்டல நீரால் அலம்பிக்கொண்டிருக்கிறான். மிக அழகான சிற்பம்.

2 Comments:

At 9:57 PM, Blogger Srini said...

Athimber,

Amazing post. I enjoyed every word of it.You have given a mix of nectar - from kambar,azhvars and Andal. The photo only doubnles the bliss!Can you upload those Tirukurungudi photos to your Flickr?

 
At 2:31 AM, Blogger Vijay said...

Lovely post - i have a blogsite that focuses on sculpture.

i have featured thirukurungudi in my blogs

http://www.poetryinstone.in/lang/ta/2008/09/25/an-intro-post-on-tirukurungudi-a-guest-post-mr-kannan.html.

Your post is very lovely, i would love to use the narration for an upcoming post on mallai tiruvikrama panel ( with due credits to you). pl oblige

rgds
vj
www.poetryinstone.in

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது