vishnuchittan

Wednesday, December 28, 2005

மன்னு குறுங்குடியாய் 2


தகக மரத்தின் தாழ் சினையேறித் தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிரையுண்னும் குறுங்குடியே.

இன்னும் பறக்கத்தெரியாததால் ஒரு தாழ்ந்த கிளையில் ஏறி இருந்து கொண்டு கொக்கின் குஞ்சு தன் தாயின் வாயில் இருந்து இரையுண்னும் குறுங்குடி என்கிறார் திருமங்கையாழ்வார்.

இந்தத் திருக்குறுங்குடியின் கோபுரத்தின் வெளி இடப்புறத்தில் இந்த கோவர்த்தனதாரியான க்ருஷ்ணனின் புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது.


இந்திர னுக்கென் றாயர்க ளெடுத்த
எழில்விழ வில்பழ நடைசெய்,
மந்திர விதியில் பூசனை பெறாது
மழைபொழிந் திடத்தளர்ந்து, ஆயர்
எந்தமோ டினவா நிரைதள ராமல்
எம்பெரு மானரு ளென்ன,
அந்தமில் வரையால் மழைதடுத் தானை

வழக்கமாகத் தனக்கு பெரிய விழாவாக எடுத்து மிகவும் சிறப்பான உணவு வகைகளைப் படைக்கும் ஆயர்கள், கண்ணனின் ஆலோசனையின் பெரில் அவர்களின் பசு மாடுகள் மற்றும் கன்றுகளுக்கு புல் மற்றும் தீவனங்களை அளிக்கும் கோவர்த்தன மலைக்கு அவற்றைப் படைத்து விடுகிறார்கள். இதனால் மிகவும் கோபம் அடைந்த இந்திரன் ஆயர்பாடியில் ஏழு நாட்கள் விடாமல் கடும் மழையைப் பொழிவிக்கிறான். தன்னை சரணடைந்த ஆயர்களையும் அவர்களது பசுக்களையும், கண்ணன் கோவர்த்தன மலையைப் பெயர்த்து எடுத்து ஒரு குடையாகப் பிடித்து அந்த ஏழு நாட்களும் காப்பாற்றுகிறான். அதற்கு மேல் பொழிவதற்கு மழை இல்லாமல் வற்றி தன் தவறை உணர்ந்து இந்திரன் கண்ணனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு கண்னனுக்கு காமதேனுவின் பாலால் அபிஷேகம் செய்து "கோவிந்தன்" ( பசுக்களின் காவலன்) என்ற பெயர் சூட்டி பட்டாபிஷேகம் செய்து விட்டு இந்திரலோகம் செல்கிறான்.

இதை பெரியாழ்வார்

குன்றினால் குடை கவித்ததும்

என்றும்

மேலையமரர் பதி மிக்கு வெகுண்டு வர
காளநன் மேகமவை கல்லொடு கால் பொழிய
கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே

என்றும் போற்றுகிறார்.

ஆண்டாளும்

குன்று குடையாயெடுத்தாய் குணம் போற்றி

என்று ஆயர்களுக்காக அவன் காண்பித்த சௌலப்ய குணத்திற்கு பல்லாண்டு பாடுகிறாள்.

திருமங்கையாழ்வார்

அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின் கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ்சோற்றை
முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும்

என்று தானே ஒரு பூத வடிவு கொண்டு பெரிய வண்டிகள் மூலம் கொண்டு வரப் பட்ட மிகுதியான சோற்றை கண்ணனே உண்டதாகச் சொல்கிறார்.

இதைப் பெரியாழ்வார் கூறும் பொழுது

அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும்
தயிர் வாவியும் நெய்யளறுமடங்கப்
பொட்டத்துற்றி மாரிப் பகை புணர்த்த
பொருமா கடல் வண்னன்

சமைத்து மலை போல் குவிக்கப்பட்ட சோற்றையும் தயிர்க் குளத்தையும் நெய்யாகிய சேற்றையும் முழுவதும் உண்டு மழை தடுத்த கடல் நிறத்தவனாகிய கண்ணன் என்கிறார்.

இதையே ந்ம்மாழ்வாரும்

உன்ண வானவர் கோனுக்கு
ஆயர் ஒருப்படுத்தவடிசிலுண்டலும்
வண்ண மால் வரையெடுத்து
மழை காத்ததும்

என்கிறார்.

பெரியாழ்வார் இங்கு கண்ணனை மட்டுமில்லாது அவன் எடுத்த கோவர்த்தன மலையையும் பத்து பாடல்களால் கொண்டாடுகிறார்
.

இழவுதரியாததோர் ஈற்றுப்பிடி
இளஞ்சீயம் தொடர்ந்து முடுக்குதலும்
குழவியிடைக் காலிட்டெதிர்ந்து பொரும்

கோவர்த்தனமென்னும் கொற்றக்குடையே

அப்பொழுதுதான் ஈன்ற தன் கன்றை தன் கால்களின் நடுவில் விட்டுக் காத்துக்கொண்டு தன்னைத் தொடர்ந்து எதிர்க்கும் சிங்கத்துடன் போரிடும் பெண் யானையை உடைய கோவர்த்தன மலையென்றும்

கானக்களியானை தன் கொம்பிழந்து
கதுவாய்மதஞ்சோரத் தன்கையெடுத்து
கூனற்பிறை வேண்டியண்ணாந்து நிற்கும்
கோவர்த்தனமென்னும் கொற்றக்குடையே

தன் த்ந்தத்தை இழந்த யானை வானத்தில் தோன்றிய பிறைச்சந்திரனை தன் தந்தமென்று நினைத்து அதைப் பிடிக்க அன்ணாந்து பார்க்கும் கோவர்த்தன மலையென்றும்

அடங்கச்சென்றிலங்கையையீடழித்த
அநுமன் புகழ் பாடித் தன் குட்டன்களை
குடங்கைக் கொண்டு மந்திகள் கண் வளர்த்தும்
கோவர்த்தனமென்னும் கொற்றக்குடையே


மனிதர்கள் தன் முன்னோர்கள் மற்றும் பல புகழ் பெற்ற மனிதர்களின் கதைகளைக் கூறி தங்கள் குழந்தைகளை உறங்க வைப்பதுபோல் கொவர்தன மலையில் உள்ள குரங்குகள் தங்கள் முன்னோனான அநுமனின் புகழ் பாடித் தம் குட்டிகளை தங்கள் தோள்களில் போட்டு உறங்க வைக்கின்றன என்றும்

முன்பே வழி காட்ட முசுக்கணங்கள்
முதுகிற்பெய்து தம்முடைக் குட்டன்களை
கொம்பேற்றியிருந்து குதிபயிற்றும்
கோவர்த்தனமென்னும் கொற்றக்குடையே

குரங்குகள் தம் குட்டிகளைத் தம் முதுகில் சுமந்து சென்று மேற்கிளையில் கொண்டு விட்டு அவற்றிற்கு குதிப்பதற்கு பயிற்சியளிக்கும் கோவர்த்தன மலை என்றும் கொண்டாடுகிறார்.

மேலும் பெரியாழ்வார்

கண்ணன் கோவர்த்தன மலையை யெடுத்துப் பிடித்து நின்றது

வானத்துலுள்ளீர் வலியீருள்ளீரேல்
அறையோ வந்து வாங்குமினென்பவன் போல்

வானத்திலுள்ளவர்கள் யாராவது பலமுள்ளவர்கள் இருந்தால் இந்த மலையை வந்து பறித்துக் கொண்டு போகலாம் என்று அறை கூவி நிற்பது போன்று இருக்கிறது என்கிறார்.

மேலும்

படங்கள் பலவுமுடைப் பாம்பரையன்
படர் பூமியைத்தாங்கிக் கிடப்பவன் போல்
தடங்கை விரலைந்தும் மலரவைத்துத்
தாமோதரன் தாங்கு தடவரை

என்று பல தலைகளையுடைய ஆதிசேஷன் பூமியைத்தாங்கிக் கிடப்பது போல் தன் விரல்கள் அனைத்தையும் கொண்டு கண்ணன் கோவர்த்தன மலையைத் தாங்கி நின்றதாகக் கூறுகிறார்.

கொடியேறு செந்தாமரைகைவிரல்கள்
கோலமுமழிந்தில வாடிற்றில
வடிவேறு திருவுகிர் நொந்துமில
மணிவண்ணன் மலையுமோர் சம்பிரதம்

கண்ணன் மலையையெடுத்த பொழுது அவனுடைய தாமரை போன்ற விரல்கள் சிறிது கூட வாடவில்லை, நகங்கள் கூட வலிக்கவில்லை அவன் மலையையெடுத்தது ஒரு சம்ப்ரதாயம்; ஒரு பாசாங்கு என்கிறார் பெரியாழ்வார்.

இதையே ஸ்ரீபாகவதம் இவ்வாறு கூறுகிறது.

tasmân mac-charanam goshthham
man-nâtham mat-parigraham
gopâye svâtma-yogena
so 'yam me vrata âhitah

tasmât - therefore; mat-s'aranam - having taken shelter of Me; goshthham - the cowherd community; mat-nâtham - who have Me as their master; mat- parigraham - My own family; gopâye - I shall protect; sva-âtma-yogena - by My personal mystic power; sah ayam - this; me - by Me; vratah - vow; âhitah - has been taken.

TRANSLATION

I must therefore protect the cowherd community by My transcendental potency, for I am their shelter, I am their master, and indeed they are My own family. After all, I have taken a vow to protect My devotees.

ity uktvaikena hastena
kritvâ govardhanâcalam
dadhâra lîlayâ vishnus'
chatrâkam iva bâlakah

iti - thus; uktvâ - having spoken; ekena - with one; hastena - hand; kritvâ - taking; govardhana-acalam - Govardhana Hill; dadhâra - He held it; lîlayâ - very easily; vishnuh - Lord Vishnu; chatrâkam - a mushroom; iva - just as; bâlakah - a child.

TRANSLATION
Having said this, Lord Krishna, who is Vishnu Himself, picked up Govardhana Hill with one hand and held it aloft just as easily as a child holds up a mushroom
.

என்று கண்ணன் மலையை எடுத்தது ஒரு சிறு குழந்தை ஒரு கையால் ஒரு காளானை எடுத்து நின்றாற் போல் இருந்தது என்று.

ஏன் கண்ணன் கல்லையெடுத்துக் கல் மாரி காத்தான் என்றால், இந்திரன் கல் மாரி பெய்ததால். அவன் கடல் மாரி பொழிந்திருந்தால் கண்ணன் கடலெடுத்துக் கடல் மாரி காதிருப்பான் என்று பராசர பட்டர் என்ற வைணவ ஆச்சாரியர் திருமங்கையாழ்வாரின் 'கல்லெடுத்துக் கல் மாரிகாத்தாய் என்றும்' என்ற திருநெடுந்தாண்டக பாசுரத்திற்கு உபன்யாசம் செய்யும் பொழுது கன்ணனின் அளவு கடந்த சாமர்த்தியத்தைப் போற்றுகிறார்.

சரி! கண்ணன் தன்னுடைய அடியவர்களான ஆயர்கள் மற்றும் பசுக்களுக்குத் துன்பம் விளைவித்த இந்திரனைத் ஏன் தண்டிக்கவில்லை என்றால் இந்திரன் செய்த செயல் அவனது பசிக் கொடுமையினால் விளைந்தது. எனவேதான் கண்னன் அவனைத் தண்டிக்கவில்லை என்று பராசர பட்டர் என்ற உரையாசிரியர் கூறுகிறார்.

மேலே உள்ள கோவர்த்தன கிரிதாரியின் புடைப்புச் சிற்பம் மேலே சொன்ன முழு கதையையும் கண் முன் நிறுத்துவதாக இருக்கிறது. கண்ணன், ஆயர்கள், பசுக்கள், கோவர்தன மலை, மலை மேல் மிருகங்கள், முனிவர்கள் அனைத்தும் மிக அழகாக செதுக்கப் பட்டிருக்கிறது. கன்ணன் பசுவிற்கு ஒரு கையால் புல் கொடுத்துக் கொண்டிருக்கும் அழகே அழகு.

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது